ஸ்ரீபெரும்புதூரில் விஷவாயு தாக்கி பலியான 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.21 லட்சம் இழப்பீடு - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடவடிக்கை

ஸ்ரீபெரும்புதூரில், சுத்திகரிப்பு பணியின் போது விஷவாயு தாக்கி பலியான 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.21 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-10-26 14:44 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு ஓட்டலில் கழிவு நீர் தொட்டியில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரங்கநாதன், நவின்குமார், திருமலை ஆகிய 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியாகினர். சம்பவம் நடைபெற்ற இடத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் இன்று நேரில் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வது எந்திரமயமாக்கப்பட்டு மனிதர்களை பயன்படுத்துவது சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டியது அவசியம் ஆகும். இந்த சம்பவத்தில் பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.21 லட்சம் வழங்கப்படும். இதில் சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் தலா ரூ.15 லட்சம், தமிழக அரசு தலா ரூ.6 லட்சம் வழங்கும்.

இதுதவிர இவர்களது குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் கருணை தொகை, வீட்டுமனை பட்டா, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த ஓட்டலின் உரிமையாளரை அடுத்த 72 மணி நேரத்துக்குள் கைது செய்ய வேண்டும் என்று போலீஸ்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்