தாம்பரத்தில் நிலம் விற்பதாக ரூ.2 கோடி மோசடி; 2 பேர் கைது

தாம்பரத்தில் நிலம் விற்பதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-12 10:33 GMT

நிலம் விற்பனை

சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் சாம் ஏசுதாஸ் (வயது 53). இவரிடம், தாம்பரத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ராஜவேல், நமச்சிவாயம் என்ற சிவா ஆகியோர் தங்களுக்கு இல்லாத நிலத்தை விற்பனை செய்வதாக கூறி ரூ.4 லட்சம் பெற்றனர்.

அதற்கு பதிவு செய்யப்படாத கிரய ஒப்பந்தம் ஒன்றையும் வழங்கி உள்ளனர். பின்னர் கிரய ஒப்பந்தத்தில் கூறியபடி நிலத்தை பதிவு செய்து கொடுக்காததால் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட சாம் ஏசுதாசுக்கு அவர்கள் இருவரும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

ரூ.2 கோடி மோசடி

இதையடுத்து பாதிக்கப்பட்ட சாம் ஏசுதாஸ், இந்த நில மோசடி குறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தாம்பரம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் ராஜவேல், நமச்சிவாயம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் இதுபோல் சுமார் 51 பேரிடம் நிலம் விற்பதாக கூறி ரூ.2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் ராஜவேல், நமச்சிவாயம் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்