திருமங்கலம் தொகுதிக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

திருமங்கலம் தொகுதிக்கு வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2023-09-08 20:15 GMT

திருமங்கலம்

திருமங்கலம் தொகுதிக்கு வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆய்வு கூட்டம்

திருமங்கலம் யூனியன் அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து கூடுதல் ஆட்சியர் மோனிகாரணா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பல்வேறு குறைகளை தெரிவித்தார். அப்போது அவா் கூறுகையில், திருமங்கலம் தொகுதியில் 100 நாள் வேலை திட்டம் சரிவர மக்களுக்கு வழங்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்.

திருமங்கலம் தொகுதியில் 116 ஊராட்சிகள், ஒரு நகராட்சி, 2 பேரூராட்சிகள் உள்ளன. ஆனால் தொகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படாமல், பாராமுகம் காட்டப்பட்டு வருகிறது. அனைத்து தொகுதிகளுக்கும் சமநிலையில் நிதியை ஒதுக்க வேண்டும். செக்கானூரணியில் திறக்கப்பட்ட அம்மா பூங்கா தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது. ஊராட்சிகளுக்கு எந்த சிறப்பு நிதி ஒதுக்கப்படவில்லை, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ரெயில்வே மேம்பாலம்

மதுரை மாவட்டத்தில் 10 தொகுதி உள்ளது, இதில் 5 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் திருமங்கலம் ரெயில்வே மேம்பாலம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு பூமி பூஜை நடைபெற்றது. மேலும் நில எடுப்பு பணிகளும் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. புதிய பஸ் நிலையம் அமைக்க கடந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, நில ஒப்படைப்பு பணி நடைபெற்று, டெண்டர் கோரப்பட்டது. தற்போது பழைய பஸ் நிலையத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டு அந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.

கப்பலூர் சுங்கச்சாவடி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றுவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். தற்போது கூட, மத்திய அரசு சில சுங்கச்சாவடி அகற்றப்படும் அறிவித்தது அதில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தாமல் இருப்பதை கண்டித்து எடப்பாடி பழனிசாமி அனுமதி பெற்று தி.மு.க. அரசை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவோம் என கூறினார்.

நிகழ்ச்சியில் வக்கீல் தமிழ்ச்செல்வம், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கராஜ பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், முசிசோமு முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்