ஆட்சி அதிகாரத்தில் பங்கு... இருமுறை நீக்கப்பட்ட வீடியோவை மீண்டும் பதிவு செய்த திருமாவளவன்

அட்மினுக்குள் குழப்பம் என்று திருமாவளவன் கூறியிருந்தநிலையில் தற்போது மீண்டும் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

Update: 2024-09-14 12:50 GMT

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் 2-ந்தேதி மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அ.தி.மு.க. மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.வை அழைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. இந்த மது ஒழிப்பு மாநாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் ஆட்சி, அதிகாரம் குறித்து தான் பேசிய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் திடீரென பகிர்ந்தார். வீடியோவை பதிவிட்ட சிலமணி நேரங்களிலேயே அது எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. மீண்டும் ஒருமுறை பதிவிடப்பட்டு மறுபடியும் நீக்கப்பட்டது. திருமாவளவன் திடீரென ஆட்சி, அதிகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, நீக்கிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன், "தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்த காலத்தில் இருந்து மது ஒழிப்பு குறித்து பேசி வருகிறோம். கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என 1999ம் ஆண்டு பேசினேன். அதை நினைவு படுத்தி நேற்று செங்கல்பட்டில் நான் பேசியதை என் அட்மின் எடுத்து பதிவு செய்துள்ளார்கள். சமூக வலைதளத்தில் நீக்கம்செய்யப்பட்டது பழைய வீடியோ இல்லை, நேற்று பேசியது தான். 2 அட்மின்கள் உள்ளார்கள். ஒருவர் வீடியோவை பதிவு செய்துள்ளார். ஒருவர் நீக்கியுள்ளார். ஆனால் ஏன் அதை நீக்கினார் என்பது குறித்த விளக்கம் இன்னும் அவரிடம் கேட்கப்படவில்லை.

அதிகாரம் எளிய மக்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பது தான் எப்போதும் எங்கள் கோரிக்கை. ஜனநாயக பரவலாக்கத்தை எப்போதும் பேசலாம். எனக்கு உண்மையில் அரசாங்கத்தில் பங்கு வேண்டும் என நினைத்திருந்தால் தேர்தல் நேரத்தில் கேட்டிருப்பேன். இப்போது கேட்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டை முடிச்சு போட கூடாது. காவிரி நீர், ஈழ தமிழர் விவகாரங்களில் அனைவரும் இணைவது போல் இந்த விவகாரத்திலும் இணையலாம். பா.ம.க. உடன் எங்களுக்கு கசப்பான அனுபவங்கள் இருப்பதால் அவர்களை மாநாடுக்கு அழைக்கவில்லை. இப்போதும் நாங்கள் தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளோம். கூட்டணியில் தான் தொடர்கிறோம். அதில் எந்த பிரச்சனையும் இல்லை" என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் இருமுறை நீக்கப்பட்ட வீடியோவை திருமாவளவன் மீண்டும் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த பதிவில், கடைசி மனிதனுக்கும் சனநாயகம்.. எளிய மக்களுக்கும் அதிகாரம்... ஆட்சியிலும் பங்கு ! அதிகாரத்திலும் பங்கு ! - என 1999ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்று கடந்த 12ம் தேதி மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் ஆற்றிய உரையின் சுருக்கம் என்று கூறி அதன் முழு காணொளியும் அதில் இணைக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்