விஜய் வருகையால் எங்களுக்கு பாதிப்பில்லை - சீமான்

தமிழர் தலைவர்களுக்கும் விஜய் மரியாதை செலுத்த வேண்டும் என்று சீமான் கூறினார்.

Update: 2024-09-18 07:25 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும். விஜய் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை; எங்களால்தான் மற்றவர்களுக்கு பாதிப்பு. அண்ணன் செய்வது சரி என்று தம்பி விஜய் ஏற்றுக்கொண்டால் என்னுடன் கூட்டணிக்கு வரட்டும். இல்லை என்றால் அவர் வேலையை பார்த்துட்டு போகட்டும். எனக்கு ஒரு கனவு இருக்கிறது, அதை ஏற்றுக்கொண்டு வருபவர்களை ஏற்போம். தேசிய மற்றும் திராவிடக் கட்சிகள் தவிர்த்து.

நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் பாஜக ஆதரவை விட்டு விலகினால், திமுக 22 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நிச்சயம் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கும். என்னுடன் கூட்டணிக்கு யாராவது வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை செய்ததைபோல் தமிழர் தலைவர்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும். சாதி ஒழிப்பு, தீண்டாமை உள்ளிட்டவற்றிற்கு பெரியாரும் போராடினார்; ஆனால் பெரியார் மட்டும்தான் போராடினார் என்பதை ஏற்க முடியாது.

இந்த நாடு அடிமைப்பட்டு இருந்தபோது, நாட்டின் விடுதலைக்கு போராடியவர்கள் எல்லாம் இப்போது பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் இருக்கிறார்கள். ஒரு போராட்டத்தில் கூட பங்கேற்காதவர்கள் நாடாளுமன்றத்திலும், பதவியிலும், பாஜகவிலும் இருக்கிறார்கள். இதுதான் போராட்ட வரலாறு. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்