நெல்லை மருத்துவக்கழிவு விவகாரம்: மேலும் இருவர் கைது

மருத்துவக்கழிவு கொட்டப்பட்ட விவகாரத்தில் கேரள ஏஜெண்டுகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

Update: 2024-12-21 17:13 GMT

நெல்லை,

நெல்லை அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கேரள மாநில மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் இறங்கியது.

அதன்படி நடுக்கல்லூர் உள்ளிட்ட 4 இடங்களிலும் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் மற்றும் கிரெடன்ஸ் தனியார் மருத்துவமனை கழிவுகள் தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கான மருந்து குப்பிகள், சிரிஞ்சுகள், ரத்த சாம்பிள்கள், ஆவணங்களை நெல்லை மாவட்ட அதிகாரிகள் சேகரித்து பசுமை தீர்ப்பாயத்திடம் ஒப்படைத்தனர்.

அதன்படி, நெல்லை அருகே கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி நேற்று கேரள குழுவினர் வந்து ஆய்வு செய்தனர். பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி மருத்துவக் கழிவுகளை அகற்ற கேரள அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறினர்.

மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் ஏற்கெனவே 2 பேர் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். பணம் வாங்கிக்கொண்டு கழிவுகளை கொட்டியதாக சுத்தமல்லியை சேர்ந்த மனோகர் மற்றும் மாயாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கழிவு கொட்டப்பட்ட விவகாரத்தில் மனோகர் தலைமை ஏஜென்ட்டாக செயல்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஏஜெண்டுகள் கைதான நிலையில், கேரள ஏஜெண்டுகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 'கழிவுகள் அகற்றும் நிறுவனத்தின்' மேற்பார்வையாளர் சிபின் ஜார்ஜ் மற்றும் சேலம் ஓமலூரைச் சேர்ந்த லாரி உரிமையாளர் செல்லதுரை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Tags:    

மேலும் செய்திகள்