தென்காசி: கடையம் அருகே விவசாயி கொடூரக்கொலை

விவசாயி தலை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-12-21 22:10 GMT

தென்காசி,

தென்காசி மாவட்டம் கடையம் அடுத்த கருத்தப்பிள்ளையூர் அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 45). விவசாயியான இவர் ஆதரியானூர் அச்சங்குளம்- கள்ளத்திகுளம் பகுதியில் மீன் பாசி குத்தகைக்கு எடுத்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு இருதயராஜ் குளத்தில் காவலுக்கு இருந்தார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருதயராஜை சரமாரியாக வெட்டி, அவரது தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர்.

நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இருதயராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன், உடனடியாக இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதயராஜ் உடல், தலையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட இருதயராஜிக்கும், சிலருக்கும் சொத்து பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதே நேரத்தில் இருதயராஜ், மீன் பாசி குத்தகைக்கு எடுத்து இருப்பதால் இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவரை யாரேனும் மர்ம நபர்கள் கொலை செய்து இருக்கலாமா?, அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags:    

மேலும் செய்திகள்