நெல்லையில் முழு வீச்சுடன் தொடங்கியது மருத்துவக்கழிவுகளை அகற்றும் பணி
நெல்லையில் மருத்துவக்கழிவுகளை அகற்றும் பணி முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நெல்லை,
கேரளா மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை மூட்டை மூட்டையாக லாரிகளில் கொண்டு வந்து நெல்லை அருகே நடுக்கல்லூர், கொண்டாநகரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சுத்தமல்லி போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து சுத்தமல்லி போலீசார் 6 வழக்குகளைபதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே நெல்லையைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய லாரியின் உரிமையாளர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தனியார் கழிவு மேலாண்மை நிறுவனத்தின் சூப்பர்வைசர் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே பசுமை தீர்ப்பாயம், மருத்துவ கழிவுகளை கேரள மாநில அரசே அப்புறப்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து கேரளா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.
இந்த சூழலில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்காக திருவனந்தபுரம் உதவி கலெக்டர் தலைமையில் 30 பேர் கொண்ட குழு கேரளாவில் இருந்து இன்று நெல்லை வந்திருந்தனர். தொடர்ந்து தமிழக மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன், கேரள மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள கேரள கழிவுகளை அகற்றும் பணி முழுவீச்சில் தொடங்கி உள்ளது. கேரளாவில் இருந்து வந்த 30 பேர் கொண்ட குழு தற்போது 6 குழுக்களாக பிரிந்து குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி நெல்லை பகுதியில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள், லாரிகளில் மீண்டும் ஏற்றப்பட்டு வருகின்றன. கேரளாவில் இருந்து வந்த அதிகாரிகள் குழுவினர் இக்கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே எடுத்துச் செல்கின்றனர். கழிவுகளை அகற்றும் பணிக்காக திருவனந்தபுரத்தில் இருந்து ஏற்கனவே லாரிகள் வரவழைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.