உணவு படைக்கும் கடவுள்களை போராடத் தூண்டாதீர் - ராமதாஸ் எச்சரிக்கை

உணவு படைக்கும் கடவுள்களை போராடத் தூண்டாதீர் என்று ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-12-22 05:13 GMT

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலையில் நேற்று உழவர் பேரியக்க மாநாடு பிரமாண்டாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டை நடத்தி முடித்த உழவர் பேரியக்க நிர்வாகிகளுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் முனைவர் கணேஷ்குமார், ஏந்தல் பக்தா, வேலாயுதம், பாண்டியன் ஆகியோருக்கும், அவர்களுக்கு துணை நின்ற தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் பா.ம.க மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவண்ணாமலையில் நடத்தப்பட்ட உழவர் பேரியக்க மாநாடு என்பது கூடிக் கலைவதற்கான நிகழ்வு அல்ல. மாறாக, உழவர்களின் துயர் துடைப்பதற்கான மாநாடு. அந்த மாநாட்டில் உழவர்களின் கோரிக்கைகள் தீர்மானங்களாக வடிக்கப்பட்டு மொத்தம் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை தீர்மானங்கள் என்பதையும் தாண்டி உழவர்களின் குரல்கள். அவை அபயக்குரல்கள் அல்ல; உரிமைக்குரல்கள். அவை அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை பாட்டாளி மக்கள் கட்சியும், உழவர் பேரியக்கமும் ஓயப் போவதில்லை.

உழவர்களின் உரிமைகளைக் காப்பதற்காக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை போர் நினைவுச் சின்னம் அருகில் முற்றுகை போராட்டத்தை அடுத்த ஆண்டில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் நடத்தும். தமிழ்நாடு முழுவதும் உள்ள உழவர்கள் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர்கள், மாட்டு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் தலைநகரை நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் பங்கேற்பார்கள். இதற்காக தேசிய, மாநில அளவிலான உழவர் அமைப்புகளின் ஆதரவு கோரப்படும். இந்தப் மாபெரும் போராட்டத்திற்கான தேதியை அடுத்த ஆண்டில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் அறிவிக்கும்.

உலகில் உயர்ந்த சக்தி என்றால் அது உழவர் சக்திதான். உணவு படைக்கும் கடவுள்களை போராடத் தூண்டாதீர். அதனால், தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் 10 கோரிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்; அதன் மூலம் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் நடத்தவிருக்கும் சென்னை முற்றுகைப் போராட்டத்தை தவிர்ப்பது தமிழக அரசின் கைகளில் தான் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்