மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது.
சென்னை,
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் என 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. 2026ம் சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மாநிலங்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், அதனை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.