மூதாட்டியின் கழுத்தை நெரித்து 4 பவுன் நகை கொள்ளை
கலவை அருகே நள்ளிரவில் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையன் மூதாட்டிசின் கழுத்தை நெரித்து 4 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றான்.
முகமூடி அணிந்த நபர்
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள வேம்பி ரோட்டுத்தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 82). இவரது மனைவி ரங்கநாயகி (70). இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. மகன் ராமசந்திரன் அமெரிக்காவில என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
வயதான ரங்கநாதன், ரங்கநாயகி ஆகிய இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு கணவன்- மனைவி இருவரும் தூங்கினர். நள்ளிரவு 1 மணியளவில் மர்ம நபர் ஒருவர் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்துள்ளான். அப்போது கழிவறைக்கு செல்ல எழுந்த ரங்கநாயகி, முகமுடி அணிந்த மர்ம நபர் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டுள்ளார்.
நகை கொள்ளை
உடனே அந்த நபர் மூதாட்டியின் கழுத்தை நெரித்து அவர் அணிந்து இருந்த சுமார் 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார்.
இது தொடர்பாக கலவை போலீஸ் நிலையத்தில் மூதாட்டி ரங்கநாயகி கொடுத்த புகாரின் பேரில் விரைந்து சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் காண்டீப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா ஆகியோர் மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.