குவாரிகளை மூட வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்

லாரிகள் செல்ல சாலை விரிவாக்கம்: குவாரிகளை மூட வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-07 16:27 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கொரட்டகிரி கிராமத்தில் 6 குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும் குவாரிகளுக்கு செல்லும் லாரிகளால் புழுதி ஏற்பட்டு பள்ளியில் மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் குவாரிகளை மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் குவாரிகளுக்கு லாரிகள் செல்ல வசதியாக மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குவாரிகளை மூட வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி தலைவர் நாகராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கருப்புக்கொடியுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்