சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள விக்டோரியா பொது அரங்கு ரூ.32½ கோடியில் சீரமைக்கும் பணி

சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா பொது அரங்கத்தை ரூ.32½ கோடியில் சீரமைக்கும் பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2023-03-20 21:50 GMT

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் விக்டோரியா பொது அரங்கம் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கட்டிடம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இங்கிலாந்து பேரரசி விக்டோரியா பெயரால் உருவாக்கப்பட்டது.

சென்னை மாநகரின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாகவும், விக்டோரியா ராணி ஆட்சியின் பொன் விழாவை நினைவு கூறும் வகையிலும் அமைக்கப்பட்ட இந்த கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் விக்டோரியா பொது அரங்க கட்டிடத்தை ரூ.32.62 கோடியில் அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

அதன்படி, இந்த பணியை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் விக்டோரியா பொது அரங்கை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன்பின்பு, அங்கு மேற்கொள்ளப்பட உள்ள புனரமைப்பு பணிகள் குறித்த காணொலி காட்சியை பார்வையிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்