உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம்
பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது.
பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது.
நிவாரண உதவி
கடந்த ஏப்ரல் 15-ந் தேதி விளாம்பட்டியில் நடந்த பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த கருப்பசாமி மற்றும் தங்கவேல் குடும்பத்தினர் தங்களுக்கு நிவாரண உதவி கிடைக்கவில்லை என்றும் அவர்களிடம் இருந்து நிவாரண உதவி பெற்று தருவதுடன் அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.
அதேபோல சமூகத்துறை பட்டியை சேர்ந்த குமரேசன் குடும்பத்தினரும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தலைவர் இறந்துவிட்ட நிலையில் நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு கொடுத்தனர். பட்டாசு நல வாரியம் முறையாக செயல்பட வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது.
பொது மயானம்
மக்கள் நீதி மய்யத்தின் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ், மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனுவில், கூரைக்குண்டு பஞ்சாயத்தில் உள்ள அல்லம்பட்டி பொது மயானம் நகராட்சி இடத்தில் உள்ள நிலையில் அதனை கூரைக்குண்டு பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு பெற்றுத்தரவும், பொது மயானத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
வீர செல்லையாபுரம் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், தங்கள் கிராமத்தில் தாங்கள் பயன்படுத்தி வந்த பாதையை தனியார் நிறுவனத்தினர் தடுத்துள்ள நிலையில் அதனை மீண்டும் தங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
பஸ் வசதி
விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ெரயில் நிலையத்திற்கு பஸ் வசதி செய்து தர வேண்டும் என்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் சக்கணன் மனு கொடுத்துள்ளார்.
இதேபோன்று சிவலிங்காபுரம் கிராம மக்கள் சிவகாசியில் இருந்து ஆலங்குளம் வழியாக சிவலிங்காபுரம் கிராமத்திற்கு பஸ்வசதிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையம் யூனியன் வடகரை பஞ்சாயத்து நரிக்குளம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்துள்ள நிலையில் அதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கிராம மக்கள் கோரியுள்ளனர்.