பி.ஏ.பி. பாசன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்

தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதால், பி.ஏ.பி. பாசன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் சப்-கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-10-09 20:15 GMT

தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதால், பி.ஏ.பி. பாசன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் சப்-கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

அப்போது, சி.மலையாண்டிபட்டிணம் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் பி.ஏ.பி. கால்வாய்க்கு அருகே கிணறு அமைத்து தண்ணீரை வணிக பயன்பாட்டிற்கு எடுத்து வருகின்றனர். இதுகுறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறப்பட்டு உள்ளது.

சிறுவர் பூங்கா

'பொள்ளாச்சி நகராட்சியில் நமக்கு நாமே' என்று குறிப்பிடப்பட்ட பேனருடன் வந்து வக்கீல் அய்யப்பன் கொடுத்த மனுவில், பொள்ளாச்சி ஜோதி நகர்-ஏ காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்பு ரூ.1 லட்சம், அரசு பங்களிப்பு ரூ.2 லட்சம் மதிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபாதையுடன் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு வந்தது. தற்போது ரேஷன் கடை கட்டுவதாக தெரிகிறது.

இதேபோன்று ஜோதி நகரில் சன்மார்க்க சங்கம் மூலம் பொதுமக்களின் பங்களிப்பு ரூ.10 லட்சம், அரசு பங்களிப்பு ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட நூலக கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. எனவே சப்-கலெக்டர் நேரடி ஆய்வு செய்து உண்மை நிலையை கலெக்டருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மூடிக்கிடக்கும் கழிப்பிடம்

பொள்ளாச்சி நகர பா.ஜனதா தலைவர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், பி.ஏ.பி. கால்வாய்களை முறையாக பராமரிக்காததால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாகுகிறது. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். பொள்ளாச்சி குமரன் நகரில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் மூடிக்கிடக்கும் பொதுக்கழிப்பிடத்தை திறக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

டி.கோட்டாம்பட்டி பொதுமக்கள் கொடுத்த மனுவில், கே.ஆர்.ஜி.பி. நகர், சுப்பையன் நகர், சொர்ணபுரி நகர், அண்ணா நகரில் உள்ள 80 அடி சாலையை வாகன போக்குவரத்து அதிகரிப்பை கருத்தில் கொண்டு அகலப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்