ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்- முதல் அமைச்சர் அறிவிப்பு
காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரனம் அறிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவர்களின் உடல்களை தேடும் பணியில், எடப்பாடி தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில்- சேலம் மாவட்டம் சங்கரகிரி தாலுகா கல்வடங்கம் கிராமத்தில் ஓடும் காவிரி ஆற்றில் இன்று குளிக்கச்சென்ற 4 மாணவர்கள் மூழ்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதேடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.