கையகப்படுத்திய நிலத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பின் நிவாரணம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பின்னர் நிவாரணம் வழங்கப்பட்டது.

Update: 2023-07-05 18:45 GMT

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பின்னர் நிவாரணம் வழங்கப்பட்டது.

நிலம் கையகப்படுத்தப்பட்டது

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்காக கடந்த 1987-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதன்படி தற்போதைய கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் அப்போது தாமரைக்குளம் தனுக்கோடி என்பவரின் 47 சென்ட் நிலம் மற்றும் ராமநாதபுரம் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டனின் தந்தை முருகேசன் என்பவரின் 50 சென்ட் நிலம் ஆகியவற்றை கையகப்படுத்தினர். இந்த நிலத்திற்கு சென்ட் ஒன்றிற்கு ரூ.103 என விலை நிர்ணயம் செய்து கொடுத்த நிலையில் கூடுதல் தொகை கேட்டு மனுத்தாக்கல் செய்ததில் ராமநாதபுரம் சப்-கோர்ட்டு சென்ட் ஒன்றிற்கு ரூ.900 வட்டியுடன் சேர்த்து வழங்க கடந்த 1993-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட அப்பீல் தள்ளுபடியானது. இதனால் சப்-கோர்ட்டு உத்தரவிட்ட தொகையை வழங்கவேண்டும் என்பது உத்தரவானது. அதனை தொடர்ந்து ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் மேற்கண்ட நில உரிமைதாரர்களுக்கு ஒரு பகுதி தொகையை மட்டும் வழங்கிய நிலையில் மீதம் உள்ள தொகையை வழங்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஜப்தி நடவடிக்கை

நில ஆர்ஜிதம் செய்து 36 ஆண்டுகளாகியும் நிலத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்ட தொகையை வழங்க கோரி தனுக்கோடி தரப்பினர் அலைந்து காத்திருந்தனர். ஆனால், நிலத்திற்கான தொகை வழங்காததால் நில உரிமைதாரர்களான தனுக்கோடி, செ.முருகேசன் தரப்பினர் ராமநாதபுரம் சப்-கோர்ட்டில் நிறைவேற்றக்கோரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கதிரவன் நில உரிமையாளர்களுக்கு தரவேண்டிய தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்து 382 வழங்காததால் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தினை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

அங்குள்ள மேஜை, நாற்காலி, பீரோக்கள், தட்டச்சு எந்திரம், கணினி, ஜீப் ஆகியவற்றை ஜப்தி செய்து ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. நேற்று காலை ராமநாதபுரம் கோர்ட்டு முதுநிலை கட்டளை பணியாளர் சரவணன், வக்கீல் ஜெயச்சந்திரன் மற்றும் நில உரிமையாளர் தனுக்கோடி ஆகியோர் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர்.

காசோலை

பின்னர் வருவாய் கோட்டாட்சியர் கோபு இதுதொடர்பாக மேற்கண்டவர்களிடம் ஆலோசைன செய்து உயர்அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உயர் அதிகாரிகள் ஆலோசனைப்படி நில உரிமையாளர்களுக்கு ரூ.4 லட்சத்து 41 ஆயிரத்து 351 தொகையை காசோலையாக வழங்க முடிவு செய்து அதற்கான காசோலையை கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தினை ஜப்தி செய்யும் நடவடிக்கையை கைவிட்டு அலுவலர்கள் திரும்பி சென்றனர்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கட்டிடத்திற்காக கையகப்படுத்திய நிலத்திற்கான தொகையை கோர்ட்டு உத்தரவின்படி வழங்காமல் 36 ஆண்டுகளாக இழுத்தடித்த நிலையில் ஜப்தி நடவடிக்கைக்கு பின்னர் நில உரிமையாளர்களுக்கு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொகை கோர்ட்டு நடைமுறையின்படி நீதிபதி பெயரில் வழங்கப்பட்டுள்ளதால் அதனை நில உரிமையாளர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்