ராசிபுரம் அருகே பொழுதுபோக்கு பூங்காவில் உயிரிழந்தசேலம் சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்

ராசிபுரம் அருகே பொழுதுபோக்கு பூங்காவில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண தொகையை தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வழங்கினார்.

Update: 2023-05-25 18:45 GMT

ரூ.4 லட்சம் நிவாரணம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா கீரனூர் அருகே உள்ள ஒரு தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் கடந்த 11-ந் தேதி சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் சர்வேஸ்வரன் உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த், மாவட்ட கலெக்டர் உமா, போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் நேற்று தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது சிறுவன் உயிரிழந்த பகுதி, நீர் விளையாட்டு இடங்கள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, இந்த சம்பவம் குறித்து அரசுத்துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தனர்.

பின்னர் உயிரிழந்த சிறுவனின் பெற்றோரை நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சந்தித்து அவர்களுக்கு, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சட்டப்படி, நிவாரண உதவித்தொகையாக ரூ.4 லட்சத்திற்கான காசோலையினை டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வழங்கினார்.

அடுத்த கட்ட நடவடிக்கை

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராசிபுரம் அருகே தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. இதில், சிறுவன் ரசாயன ரீதியாகவோ, நீரில் மூழ்கியோ இறக்கவில்லை என தெரியவந்து உள்ளது. உடற்கூறு ஆய்வு முடிவில் இயற்கையான இறப்பு எனவும் கூறப்பட்டு உள்ளது.

மேலும் கலெக்டர் உத்தரவின்படி, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, காவல்துறை, சுகாதாரம், உணவு பாதுகாப்பு, விளையாட்டு, மின்சார வாரியம் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக 7 நாட்களுக்குள் அந்த தனியார் பொழுதுபோக்கு பூங்கா பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த குழுவின் விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இருவிரல் பரிசோதனை

சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கவர்னர் கூறியது முற்றிலும் உண்மை. அதற்கான ஆதாரம் என்னவென்றால் போலீஸ் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கான ஆதாரம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது நாமக்கல் உதவி கலெக்டர் (பொறுப்பு) சுகந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதிஷ்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்