மது குடிக்க பணம் தராததால் வெறிச்செயல்: தாயை கட்டையால் அடித்து கொன்ற மகன்

மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் பெற்ற தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-18 10:11 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் ஒத்தவாடை குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் பத்மினி (வயது 60). பத்மினி ஒத்தவடை தெருவில் சுற்றுலா பயணிகளிடம் சங்குமணிகள், பேன்சி பொருட்கள் வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். கணவனை இழந்த இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் தரணி. இளைய மகன் முரளி (வயது 36). முரளி மதுவுக்கு அடிமையாகி வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தெருவில் வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி வந்த தனது தாயாரிடம் முரளி அடிக்கடி மிரட்டி மது குடிக்க பணம் வாங்கி சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு தனது தாயார் பத்மினியிடம் மது குடிக்க பணம் கேட்டு முரளி சண்டை போட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மாட்டேன் என்று கூறி கண்டித்துள்ளார்.

அப்போது நிலைகொள்ளாத போதையில் இருந்த முரளி பெற்ற தாய் என்றும் பார்க்காமல் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த சவுக்கு கட்டையால் தாய் பத்மினியின் தலை, மார்பு பகுதியில் கடுமையாக தாக்கி அடித்துள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவரை மூத்த மகன் தரணி, மற்றும் அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் ஓடி வந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று சென்று மாமல்லபுரம் பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பத்மினி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று மதுபோதையில் நிதானமின்றி இருந்த முரளியை கைது செய்தனர். பிறகு அவர் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மதுவுக்கு அடிமையான மகனால் தாய் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்