தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடந்த சில தினங்களாக திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் நகரின் பல்வேறு இடங்களிலும், அணைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

Update: 2023-12-17 12:53 GMT

சென்னை,

தென்தமிழகத்தில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் இன்று காலை முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பாதுகாப்பு கருதி, 30,000 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. திருச்செந்தூர், ஆழ்வார் திருநகரி திசையன்விளை, உடன்குடி, கூடங்குளம், வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. நெல்லை சமாதானபுரம், மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 20 செ.மிட்டர் மழையும் திருச்செந்தூரில் 12 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.




 


தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 30 முதல் 50 செ.மீ மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது. அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. நெல்லை பேரிடர் கட்டுப்பாட்டு மையம் 1077, மாநில பேரிடர் கட்டுப்பட்டு மையம் 1070 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தீ அணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி 101&112, மின்னக உதவி மையம் 94987 94987 அழைக்கலாம்.

களக்காடு பகுதியில் பெய்து வரும் கனமழையினால் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளம் ஊருக்குள் புகுந்து, வீடுகளை சூழ்ந்தது. தரை பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக கோவில்பட்டியில் உள்ள மூன்று சுரங்கப்பாலங்களும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கோவில்பட்டி மெயின் ரோடு, மார்க்கெட் ரோடு, நகைக்கடை பஜார் முக்கிய வீதிகள் எல்லாம் வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்