ஈரோட்டில் சூறாவளிக்காற்றுடன் கொட்டி தீர்த்த மழை

ஈரோட்டில் நேற்று சூறாவளிக்காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.

Update: 2022-05-31 21:32 GMT

ஈரோடு

ஈரோட்டில் நேற்று சூறாவளிக்காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.

கனமழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்பட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

எனினும் ஈரோட்டில் நேற்று காலை மழைக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. வழக்கம்போல் வெயில் வாட்டி எடுத்தது. அக்னி வெயில் முடிவடைந்தாலும் வெயிலின் தாக்கம் நேற்று அதிகமாகவே இருந்தது. இதன் காரணமாக நேற்று பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

கொட்டி தீர்த்த மழை

இதைத்தொடர்ந்து மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டன. இதனால் மக்கள் மழை வருமா? என்று ஆவலுடன் எதிர்பார்த்தனர். மாலை 5 மணிக்கு மழை தூறல் போட ஆரம்பித்தது. இந்த மழை சிறிது நேரத்தில் வலுபெற்று பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. மேலும் மழை பெய்தபோது சூறாவளி காற்றும் வீசியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. அதைத்தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்தது.

இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பஸ் நிலையம், முனிசிபல் காலனி, நாச்சியப்பா வீதி, பெரியவலசு, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், நாடார்மேடு, பி.பி.அக்ரஹாரம், குமலன்குட்டை, திண்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் மழைநீருடன், சாக்கடை கழிவுநீரும் கலந்து ஓடியது.

போக்குவரத்து பாதிப்பு

மேலும் இந்த மழை காரணமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் செயல்படும் காய்கறி மார்க்கெட் உள்பட பல்வேறு இடங்களில் மழை நீர் குட்டைபோல் தேங்கி நின்றது. சில இடங்கள் சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டனர்.

மாலை நேரத்தில் பெய்த மழையால் ஈரோடு சத்திரோடு, குமலன்குட்டை, ஆர்.கே.வி.ரோடு, மீனாட்சி சுந்தரனார் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஈரோடு பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் பஸ்சுக்காக காத்திருந்த பெரும்பாலான பயணிகள் மழையில் நனைந்தனர். மழை மற்றும் வெளியில் இருந்து பயணிகளை காக்க அங்கு தற்காலிகமாக இரும்பு செட் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது. நேற்று மாலை பெய்த இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது.

Tags:    

மேலும் செய்திகள்