புதுக்கோட்டை இறையூர் தீண்டாமை சம்பவம் - குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு
குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய விவகாரம் தொடர்பாக இறையூர் கிராமத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கைவயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக வேங்கைவயலில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர் சிறுமிகளுக்கு திடீரென ஒவ்வாமை ஏற்பட்டு, அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்சினை இருக்கலாம் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் நேற்று நீர்த்தேக்க தொட்டியில் ஏறி பார்த்தபோது, அந்த தொட்டியில் உள்ள தண்ணீர் அசுத்தம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஆதிதிராவிட மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம ஆசாமிகள் சிலர் அசுத்தம் செய்த விவகாரம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இறையூரில் நடைபெற்ற தீண்டாமை சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க ஏ.டி.எஸ்.பி தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் இறையூர் கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.