சென்னை புத்தகக் காட்சி நிறைவு: ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

10 சதவீதம் தள்ளுபடியுடன் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.;

Update:2025-01-12 21:38 IST

சென்னை,

பபாசி நடத்தும் 48-வது புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், கடந்த டிசம்பர் 27-ந்தேதி தொடங்கியது. இங்கு சுமார் 900 அரங்குகள் அமைக்கப்பட்டு, 10 சதவீதம் தள்ளுபடியுடன் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

புத்தகக் கண்காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்த புத்தகக் காட்சி நடைபெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படிக்கக்கூடிய அனைத்து புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டன. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கியம், வரலாறு, ஆன்மிகம், மொழிபெயர்ப்பு என பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் புத்தகக் காட்சிக்கு வருகை தந்தனர்.

இந்த நிலையில், 17 நாட்களக நடைபெற்று வந்த புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு பெற்றது. புத்தகக் காட்சி தொடங்கியதில் இருந்து, நிறைவு பெற்றது வரை மொத்தம் 20 லட்சம் பேர் புத்தகக் காட்சிக்கு வந்ததாகவும் சுமார் ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் பபாசி தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்