பெரியாருக்கும் நிகழ்கால தமிழ்நாட்டிற்கும் தொடர்பு இல்லை - அண்ணாமலை பேட்டி
பெரியாருக்கும் நிகழ்கால தமிழ்நாட்டிற்கும் தொடர்பு இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.;
கோவை,
கோவை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பெரியாருக்கும் நிகழ்கால தமிழ்நாட்டிற்கும் தொடர்பு இல்லை. எப்போதோ கட்டமைத்த பிம்பத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள். கவர்னர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார்; அவர் சொன்னது சரியே. கவர்னர் அந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
எங்கேயும் தேர்தலை புறக்கணிக்காத பாஜக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை தேர்தலை புறக்கணிப்பது என்பது மிகமிக அபூர்வம். மக்களை அடைத்து வைக்கப்படக் கூடாது என்பதற்காக தேர்தலை புறக்கணித்துள்ளோம். தவறு செய்பவர்களுக்கு தேர்தலில் மக்கள் மனசாட்சிபடி தண்டனை அளிப்பார்கள் என நம்புகிறோம்.
தேர்தலில் நின்றால்தான் ஜனநாயக கட்சி முழுமை பெறும் என்பதை நாங்கள் நம்பவில்லை. இந்த தேர்தல் முதலும், கடைசியுமாக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் தேர்தலாக இருக்க வேண்டும் என கருதுகிறோம். நாம் தமிழர் கட்சி மட்டும் போட்டியிடுவது ஒன்னும் தைரியம் அல்ல. ஈரோடு இடைத்தேர்தல் கானல் நீரை போல நடக்கக்கூடிய தேர்தல். கானல் நீரால் என்ன பயன்?.
அரசியலில் ஒரு வயது வந்தவுடன் ஓய்வளிக்க வேண்டும் என்பதற்கு கிளாசிக் உதாரணம் துரைமுருகன். அவர் ஓய்வு வயதை எட்டிவிட்டார் என்று நினைக்கிறேன். சில தலைவர்களுக்கு ஓய்வு கொடுத்து விடலாம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேடையிலேயே கூறினார்.
நடிகர் அஜித்குமார், எந்த காட் பாதர்-ம் (Godfather)இல்லாமல் சினிமாவில் நடித்து மிகப்பெரிய நடிகராக வந்துள்ளார்; (No Godfather) நோ காட் பாதர் உதயநிதி ஸ்டாலின் மாதிரி முட்டுக்கொடுக்க சந்தானமும், பின்னால் தயாரிக்க ஸ்டாலின் ஐயா இருந்ததுபோல் இல்லை; தனிமனிதனாக (Break) பிரேக் எடுத்து சாதனை படைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.