புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் தூக்கு கயிறுடன் பொதுமக்கள் மறியல்

ஆதிதிராவிட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காத விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் பொதுமக்கள் தூக்கு கயிறுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-03-07 18:50 GMT

அய்யனார் கோவில்

இலுப்பூர் அருகே உள்ள கூவாட்டுப்பட்டியில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் ஆதிதிராவிட மக்களை அனுமதிக்கவில்லை என புகார் எழுந்தது. மேலும் இந்த கோவில் பூசாரி ஆதிதிராவிடர்களை உள்ளே வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இப்பிரச்சினையை தீர்க்க இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய அர்ச்சகர் நியமனம் செய்து அவரிடம் கோவில் சாவி ஒப்படைக்கப்படும் எனவும், ஆதிதிராவிடர்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை எனவும் முடிவு செய்யப்பட்டது.

சாலை மறியல்

இதையடுத்து சில மாதங்களுக்கு பின்னர் மீண்டும் பழைய பூசாரியே கோவிலை திறந்ததாகவும், ஆதிதிராவிட மக்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை எனவும் புகார் எழுந்தது. இதனைதொடர்ந்து ஏற்கனவே நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டதை முறையாக வருவாய்த்துறை நிறைவேற்றவில்லை எனக்கூறி புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் இலுப்பூர் தாலுகா அலுவலகம் முன்பு கூவாட்டுப்பட்டியை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் கையில் தூக்கு கயிறுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தாசில்தார் வெள்ளைச்சாமி, போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்ரி, துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, இலுப்பூர் இன்ஸ்பெக்டர் பிரேமலதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்