விருதுநகர் குவாரி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிடுக - முத்தரசன் கோரிக்கை

குவாரி, பட்டாசு உற்பத்தி போன்ற வெடிபொருள்கள் பயன்படுத்தும் பணியிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்ய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

Update: 2024-05-02 15:36 GMT

கோப்புப்படம் 

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகில் உள்ள கீழ உப்பிலிகுண்டு பகுதியில் கல் குவாரி கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்ததில் மூன்று பேர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளனர். எட்டு பேர் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடிவிபத்து நடந்த இடத்திற்கு அருகில் கடமங்குளம் பகுதியில் இருந்த 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் தெறிப்பும், பிளவும் ஏற்பட்டு வசிக்க முடியாத அளவுக்கு சேதமாகி உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து இது போன்ற விபத்துகள் ஏற்பட்டு வருவதற்கு தொழில்துறை பாதுகாப்பு பிரிவு பொறுப்பேற்க வேண்டும்.

வேதனையும், துயரமும் தரும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டிருப்பதும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று நிவாரணம் வழங்கப்படும் என்ற முதல்-அமைச்சர் அறிவிப்பும் ஆறுதல் அளிக்கிறது.

எனினும் எதிர்காலத்தில் குவாரி, பட்டாசு உற்பத்தி போன்ற வெடிபொருள்கள் பயன்படுத்தும் பணியிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்வதில் தமிழ்நாடு அரசு சமரசம் செய்து கொள்ளக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், குவாரி வெடிபொருள் வெடிப்பு விபத்தில் பலியான குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கவும், காயமடைந்தோர் முற்றிலும் குணமடைந்து பணிக்கு திரும்பி மறுவாழ்வு பெறும் வரையிலான காலத்திற்கு இழப்பீடு வழங்கவும், வீடுகளை இழந்து நிற்கும் கடமங்குளம் பகுதியில் பாதிக்கப்பட்டோர் வீடுகளை புதுப்பித்து கட்டித்தரவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்