சாலையில் மழைநீர் தேங்குவதை கண்டித்து மறியல்

நத்தம் அருகே சாலையில் மழைநீர் தேங்குவதை கண்டித்து கிராம மக்கள் மறியல் செய்தனர்.

Update: 2022-11-28 16:32 GMT

நத்தம் அருகே கோசுக்குறிச்சி கிராமம் உள்ளது. இங்குள்ள நத்தம்-துவரங்குறிச்சி சாலையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்வோர் மீது, தண்ணீரை பீய்ச்சியடித்தப்படி வாகனங்கள் செல்கின்றன.

தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையை சீரமைக்கக்கோரி, கிராம மக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கோசுக்குறிச்சி கிராம மக்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நத்தம்-துவரங்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்