தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ பணியாளர் நலச்சங்கம் மாவட்ட தலைவர் பெரிய முனுசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அண்ணாதுரை, நீதி, சக்திவேல் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் மணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர்கள் தமிழ்க்குமரன், மாதேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். காவல்துறை மற்றும் போக்குவரத்துதுறை சார்பில் போடப்படும் ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும். தொழிலாளர்களை பாதிக்கும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். நலவாரிய பதிவுகளை வட்டார அளவில் முகாம்கள் நடத்தி மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் ஆட்டோ இயக்கத்திற்கான மொபைல் செயலியை உருவாக்க வேண்டும். 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு பெட்ரோல், டீசல், மற்றும் கியாஸ் ஆகியவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம், ஊழலை தடுக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஆட்டோ தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.