அறநிலையத்துறை அதிகாரிகளை மிரட்டும் நோக்கில் வழக்கு தொடருவதா?-சினிமா நடிகருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பு- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அறநிலையத்துறை அதிகாரிகளை மிரட்டும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக கருத்து தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக சினிமா நடிகருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது
அறநிலையத்துறை அதிகாரிகளை மிரட்டும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக கருத்து தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக சினிமா நடிகருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவில் திருவிழா
சினிமா நடிகர் ராஜேந்திரநாத், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள முக்கூடலில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் முத்துமாலையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகத்தில் தனி நபர்கள், விழாக்குழுவினர் மற்றும் டிரஸ்டிகள் என குறிப்பிட்ட சிலர் தலையிட்டு கோவிலின் பெயரில் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கின்றனர். திருவிழாவின் போது இவர்கள் பொருட்காட்சி நடத்துகின்றனர். எனவே, இவர்களது தலையீடு இல்லாமல் திருவிழா நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு இந்த கோர்ட்டில் மனு செய்திருந்தேன்.
அதனை தொடர்ந்து, கோவில் விவகாரங்களில் சட்டவிரோதம் இருந்தால், போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்றும், அதனை சட்டத்திற்கு உட்பட்டு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கள் கடமையை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான போலீஸ் பாதுகாப்பை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
ரூ.25 ஆயிரம் அபராதம்
இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், இந்த கோர்ட்டின் உத்தரவுகளை மீறி நடந்ததாக கோவில் செயல் அலுவலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தனிநபர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது குறித்த குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. கோவில் விவகாரங்கள் தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மனுதாரர் கடுமையான ஆட்சேபனை தெரிவித்து வருகிறார். அறநிலையத்துறை அதிகாரிகளை தவறான நோக்கத்துடன் மிரட்டி துன்புறுத்தும் நோக்கத்தில் இந்த அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் அதிகாரிகளிடம் தனது வலிமையை வெளிப்படுத்துவதே இந்த மனுவின் நோக்கம் என கோர்ட்டு கருதுகிறது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதுடன் மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த தொகையை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கான ஐகோர்ட்டு கிளையின் தனி வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். உத்தரவை நிறைவேற்றிய விவரத்தை வருகிற 11-ந் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.