1-ந் தேதி முதல் 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

குமரி மாவட்டத்தில் 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

Update: 2023-07-23 19:15 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

கனிம வளங்கள்

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்து ஆணையர் மூலமாக ஒரு செயல்முறை ஆணையை பிறப்பித்துள்ளார். அந்த ஆணைப்படி இனி குமரி மாவட்டம் வழியாக 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள கனரக வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றி செல்லக்கூடாது. மேலும் 28 டன் எடைக்கு மேல் கனிம வளங்களை ஏற்றக்கூடாது.

1-ந் தேதி முதல் அமல்

குமரி மாவட்டத்தில் குறுகிய சாலைகள் தான் உள்ளன. இதன் காரணமாக கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. எனவே இதை தடுக்கும் வகையில் தான் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லாரி உரிமையாளர்கள் மற்றும் குவாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிற 1-ந் தேதி முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும்.

ஏற்கனவே கனிமவளம் கடத்தலை கண்காணிக்கும் வகையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. கோட்டார் போலீஸ் நிலையம் முன் லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளதால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே லாரிகளை நிறுத்த வேறு இடம் பார்க்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 36 குவாரிகள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 7 குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

ஆவின் பால் உற்பத்தி

தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருக றது. கொள்முதலை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். உற்பத்தியை பெருக்கும் வகையில் கறவை மாடுகள் வழங்க கடன் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது நிர்வாக ரீதியாக நல்ல நிலையில் ஆவின் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மின்சார செலவை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

ஆவின் நெய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் அதிகமாக வாங்குவதால் ஆவின் நெய்க்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏற்கனவே செயல்பட்டு வரும் பால் கூட்டுறவு நிலையங்களை மேம்படுத்தவும், புதிதாக கூட்டுறவு நிலையங்கள் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர்

பேட்டியின் போது கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மேயர் மகேஷ் மற்றும் அரசு வக்கீல் லீனஸ்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்