பனை குருத்தோலையை பதப்படுத்தும் பணிகள் மும்முரம்

பனை ஓலையில் தயாராகும் பொருட்கள் மீது மக்களுக்கு மீண்டும் ஆர்வம் அதிகரித்துள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை ஓலை குருத்துகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால் அதை பதப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது

Update: 2023-05-12 18:45 GMT


பனை ஓலையில் தயாராகும் பொருட்கள் மீது மக்களுக்கு மீண்டும் ஆர்வம் அதிகரித்துள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை ஓலை குருத்துகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால் அதை பதப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

பனை ஓலைகள்

காகிதங்கள் தோன்றாத காலத்தில் மூதாதையர்கள் ஏடுகளின் மூலமே தங்களின் அறிவுத்திறனை வளர்த்து கொண்டனர். இதனால் ஏடுகளே அறிவின் சின்னமாக கருதப்பட்டு வருகிறது. இந்த ஏடுகள் தயாரிக்கப்பட்டது பனை ஓலைகளில் இருந்துதான். இன்னும் சொல்லப்போனால் கூந்த பனைமரம், தாழிப்பனை மரம் போன்றவற்றின் ஓலைகளில்தான் ஏடுகள் தயாரிக்கப்பட்டன.

இத்தகைய சிறப்பு மிக்க பனை ஓலைகள் பலன்கள் அளப்பறியதாக உள்ளது. பழந்தமிழர்கள் பனை ஓலை மற்றும் பனை குருத்துகளில் மணமகன் பெயரையும், மணமகள் பெயரையும் எழுதி சுருட்டி மணமகளின் காதில் அணிவித்து விடுவார்களாம். அந்தக்காலத்தில் அதுதான் தாலியாக கருதப்பட்டு வந்தது. இவ்வாறு அன்று முதல் இன்று வரை பனை ஓலையும் பனை குருத்துகளும் மனிதர்களின் வாழ்வில் இரண்டற கலந்து இருந்து வருகிறது.

அதிக மவுசு

மனிதர்களின் பயன்பாட்டில் முக்கிய பொருளாக கருதப்பட்ட பனை ஓலை பொருட்கள் பிளாஸ்டிக்கின் வரவால் மெல்ல மெல்ல அழிந்து விட்டது. மேலும், விவசாய நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறிவிட்டதாலும், பனை மரங்கள் செங்கல் சூளைகளுக்கும் இன்னபிற காரணங்களுக்காகவும் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக பனை மரங்கள் ஏறத்தாழ 70 சதவீதம் அளவிற்கு அழிந்து விட்டதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக பனைமரங்கள் காணப்படுகின்றன.

நாகரிக வளர்ச்சியால் ஈர்க்கப்பட்டு சென்ற மனிதன் தற்போது மீண்டும் பண்டைய நாகரிக பயன்பாட்டிற்கு வரத்தொடங்கி உள்ளான். இதன்காரணமாக பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து விலகி வர முயன்று தற்போது மீண்டும் பனை ஓலை பொருட்கள் மற்றும் அதன் நன்மையின் மேல் அக்கறை கொண்டு அதனை நாடிச்சென்று வருகின்றான். இதன் காரணமாக தற்போது பனை ஓலையினால் செய்யப்படும் பொருட்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. என்னதான மின்சாரக்காற்று இருந்தாலும் அது வெப்பக்காற்றாக இருப்பதால் பனை ஓலையினால் செய்யப்பட்ட விசிறிகளை தற்போது அதிக அளவில் வாங்கி வருகின்றனர். இதனால் இந்த விசிறிகளுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதற்காக பனை ஓலைகள் மற்றும் பனை குருத்துகளுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது.

பனை குருத்துகள்

இதுகுறித்து ராமநாதபுரம் அருகே சிட்டாங்காடு பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் கூறியதாவது:-

பனை ஒலை மற்றும் பனை குருத்துகளில் தயாரிக்கப்படும் கொட்டான், பெட்டி, சொளகு, விசிறி, பாய் போன்றவைகளுக்கும், ஓலை மீன்பிடிப்பிற்கும் பனை குருத்துளை தூத்துக்குடி பகுதியினர் வாங்கி செல்கின்றனர். தஞ்சாவூர், வேளாங்கன்னி பகுதியினர் ஏசுகிறிஸ்து சிலையை பனை ஓலையில் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்ப வாங்கி செல்கின்றனர். பனை மரங்கள் குறைந்துவிட்டதாலும், பனை ஏறி குருத்து பறிக்க கூலி அதிகமாகி விட்டதாலும் லாபம் குறைவாக கிடைக்கிறது. இருப்பினும் தொழிலை விடக்கூடாது என்று பார்த்து வருகிறோம். மழைகாலங்களில் குருத்துகள் நனைந்து பயனில்லாமல் போய்விடும் என்பதால் கோடைவெயில் காலங்களில்தான் குருத்துகளை பதப்படுத்தி விற்பனை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்