விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் தி.மு.க. அரசு கின்னஸ் சாதனை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

விலைவாசி உயர்வில், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் தி.மு.க. அரசு கின்னஸ் சாதனை படைத்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Update: 2023-08-08 01:01 GMT


விலைவாசி உயர்வில், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் தி.மு.க. அரசு கின்னஸ் சாதனை படைத்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மரக்கன்றுகள்

மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு வலையங்குளம் ரிங்ரோட்டில் 20-ந் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில் மதுரையை சேர்ந்தவர்கள் குடும்பம், குடும்பமாக கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் ஜெயலலிதா பேரவை சார்பில் 1 லட்சம் பேருக்கு மரக்கன்றுகள் கொடுத்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அதன்படி நேற்று வண்டியூர் பூங்கா அருகில் பொதுமக்களுக்கு ஆர்.பி.உதயகுமார் மரக்கன்றுகள் வழங்கி, மாநாடு லோகோவை இருசக்கர வாகனங்களுக்கு ஒட்டினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தார். அதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் இளங்கோவன், வெற்றிவேல், பகுதி செயலாளர் அண்ணா நகர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டினை உலகமே எதிர்பார்த்து காத்து இருக்கிறது. ஏனென்றால் தமிழகத்தில் நடைபெறும் இருண்ட ஆட்சிக்கு, இந்த மாநாடு தான் முடிவு கட்ட போகிறது. கருணாநிதி நினைவு நாளுக்காக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக தி.மு.க.வினர் கூறுகின்றனர். உண்மையில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கெடு, மக்கள் விரோத ஆட்சியில் தான் தி.மு.க. கின்னஸ் சாதனை படைத்து உள்ளது.

கின்னஸ் சாதனை

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பொருட்களின் விலையையும், இப்போது இருக்கும் பொருட்களின் விலையையும் ஒப்பிட்டு பாருங்கள். உங்களுக்கே தெரியும். கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து விட்டன. சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம் ஆகியவற்றை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்தி தி.மு.க. கின்னஸ் சாதனை படைத்துள்ளது. தமிழகத்தை முதல்-அமைச்சருக்கும், அவரது மகன் உதயநிதிக்கும் பட்டா போட்டு கொடுத்தது போல் நினைக்கிறார்கள்.. அரசு விழாக்களில் அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதியும் கலந்து கொள்கிறார். தமிழகம் கருணாநிதியின் குடும்ப சொத்து அல்ல. பேரறிஞர் அண்ணா தொடங்கிய தி.மு.க., இன்று கருணாநிதி தி.மு.க.வாக மாறி விட்டது.

தொழில் துறையில் இந்த அரசு மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது. இன்றைக்கு ஒரு கோடியே 10 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக காத்து உள்ளார்கள். ஆண்டுதோறும் கல்லூரி படிப்பை முடித்துக் கொண்டு 10 லட்சம் பேர்கள் ஒவ்வொரு ஆண்டும் வேலைக்காக காத்து இருக்கிறார்கள். மக்கள் ஆதரவை தி.மு.க. இழந்து விட்டது. இந்த ஆட்சியை மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள். இனி எப்போது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும், தி.மு.க. வீட்டுக்கு போகும். அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோட்டைக்கு போகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்