ஏ‌.டி.எம். மைய கொள்ளை வழக்கு: கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு

புதுச்சத்திரம் அருகே ஏ.டி.எம். மைய கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டி போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி சான்றிதழ் வழங்கினார்.

Update: 2022-05-19 15:36 GMT

நாமக்கல்:

புதுச்சத்திரம் அருகே ஏ.டி.எம். மைய கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டி போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி சான்றிதழ் வழங்கினார்.

ரூ.1.58 லட்சம் பறிமுதல்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பெருமாள் கோவில் மேடு பஸ் நிறுத்தத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் இருந்தது. கடந்த 5-ந் தேதி அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.4.90 லட்சம் கொள்ளை போனது. இதுகுறித்து நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது..

போலீசார் விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் புரஜாபாத் (வயது 32) மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது இம்ரான் (28) ஆகியோர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளைக்கு பயன்படுத்திய கார், வெல்டிங் எந்திரம், கியாஸ் சிலிண்டர், கோடாரி மற்றும் கடப்பாரை ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

பணக்காரனாகும் ஆசை

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பெருமாள் கோவில் மேடு பஸ் நிறுத்தத்தில் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போன வழக்கில் சுரேஷ் புரஜாபாத், முகமது இம்ரான் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் ராஜஸ்தானை சேர்ந்த சுரேஷ் புரஜாபாத், சேலத்தில் 10 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார். விரைவில் பணக்காரனாக ஆசைப்பட்ட சுரேஷ் தனது நண்பர் இம்ரானுடன் சேர்ந்து ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஏ.டி.எம். மையத்தில் பழுதான கண்காணிப்பு கேமரா மற்றும் பாதுகாப்பு குளறுபடியும் அதற்கு சாதகமாகி விட்டது.

பாராட்டு

எனவே வங்கி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தினர் அபாய ஒலிப்பான்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை மாதம் இருமுறை கண்காணித்து பராமரிக்க வேண்டும். அப்போது இத்தகைய குற்றங்கள் முன்கூட்டியே தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி கொள்ளையர்களை பிடித்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம், சப்-இன்ஸ்பெக்டர்கள் பூபதி, மனோகரன், முருகன் மற்றும் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

யூ-டியூப் வீடியோ

இதனிடையே ஏ.டி.எம். எந்திர கோளாறுகளை சரி செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் மற்றும் ஏ.டி.எம். எந்திரங்கள் உடைக்கப்படும் வீடியோ பதிவுகளை கொள்ளையர்கள் யூ-டியூப்பில் பார்த்து விட்டு அதன் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்ததாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்