மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு தகுந்த நிவாரணம் வழங்குக - எடப்பாடி பழனிசாமி
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சின்னம் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாக பார்வையிட்டு தகுந்த நிவாரணத்தை வழங்குமாறு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு முழுவதும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கனமழையால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு தகுந்த நிவாரணத்தை வழங்குமாறு மு.க.ஸ்டாலினின் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.