பெங்கல் புயல் எதிரொலி: தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம்
தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
சென்னை,
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகம் 13 கி.மீ ஆக அதிகரித்துள்ளது. நாகைக்கு 400 கி.மீ. தென் கிழக்கிலும், சென்னைக்கு 590 கிமீ தெற்கு - தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது.
இந்தநிலையில், வங்கக் கடலில் உருவாகும் பெங்கல் புயல் காரணமாக, சென்னை பட்டினப்பாக்கம், மெரினா கடற்கரையில் அலைகள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன. சென்னை பட்டினப்பாக்கம் கடற்பகுதியில் 3 முதல் 4 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும்புகின்றன. சென்னை காசிமேடு பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தை நோக்கி நெருங்கி வருவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பால் பேரலைகள் எழுகின்றன.
புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் கடற்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பலத்த தரைக்காற்று வீசும் என்பதால் கடற்பகுதிக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என போலீசார் கூறி வருகின்றனர். எச்சரிக்கையை மீறி கடற்கரை பகுதிக்கு வரும் பொதுமக்களை போலீசார் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.
வங்க கடலில் பெங்கல் புயல் உருவாகும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் பல அடி உயரத்திற்கு அலைகள் எழுந்து அடங்குகிறது .கடலூர் மாவட்டம் முழுவதும் ஐந்தாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மழை பாதிப்புகளை எதிர்கொள்ள கடலூர் மாவட்டத்தில் 42 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.