கரூரில் காலையிலேயே மதுபோதையில் ரகளை செய்த பெண்ணால் பரபரப்பு
பஸ் நிலையம் அருகே மதுபோதையில் ரகளை செய்த பெண் திருப்பூரை சேர்ந்தவர் ஆவார்.;
கரூர்,
தமிழ்நாடு முழுவதுமே மது போதையில் அட்ராசிட்டி செய்வது இப்போது பல ஊர்களில் அதிகரித்து விட்டது . போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வம்பிழுக்கிறார்கள். அதன்பின்னர் மன்னிப்பு கேட்கிறார்கள். அந்த வகையில் பெண் ஒருவர் கரூரில் காலையிலேயே மது அருந்திவிட்டு போலீசாரை படாதபாடு படுத்தி உள்ளார்.
கரூர் பஸ்நிலையம் அருகே நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மதுபோதையில் சத்தம் போட்டு ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்குவந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அந்த பெண் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் என்பதும், ஒருவர் அவரிடம் ரூ.5 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றி சென்றதாகவும், அந்த பணத்தை மீட்டு தரக்கோரி ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை கரூர் அனைத்து மகளிர் போலீசார் அழைத்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.