தபால் துறை வங்கி கணக்கில் மாதாந்திர உதவித்தொகையை மாணவிகள் பெறும் வசதி

தபால் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கின் மூலம் மாணவிகள் மாதாந்திர உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம் என்று தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்

Update: 2022-06-25 16:01 GMT

தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெண் கல்வி உறுதி திட்டத்தின் கீழ், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்துவிட்டு கல்லூரி படிப்பை தொடரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக உதவித்தொகை செலுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையை தபால் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கின் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை எதுவும் கிடையாது. அனைத்து தபால் அலுவலகங்களிலும் பணத்தை பெற்று கொள்ளலாம். ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை மட்டும் வைத்து தபால் துறையில் வங்கி கணக்கு தொடங்கலாம். அனைத்து கிராமப்புற தபால் அலுவலகங்களிலும் இச்சேவை உண்டு. இந்த கணக்கு தொடங்குவதற்கு கல்லூரிகளிலும் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. இதனை மாணவிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்