பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

தேனி மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-16 18:45 GMT

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன்படி, தேனி மாவட்டம் முழுவதும் பொங்கல் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கோவில்களில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

பொதுமக்கள் தங்களின் வீடுகளில் புத்தாடை அணிந்து, புதுப் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். நகர்ப்புற குடியிருப்புகளிலும், கிராமப்புற பகுதிகளிலும் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பென்னி குயிக் பொங்கல்

தேனி வீரப்ப அய்யனார் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பலர் பொங்கல் வைத்து கொண்டாடினர். வீரப்ப அய்யனாருக்கு கரும்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்தநாளும் நேற்று முன்தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் பல இடங்களிலும் பொங்கல் வைத்து அவருடைய பிறந்தநாளை மக்கள் கொண்டாடினர்.

தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் நகரில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பென்னிகுயிக் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முளைப்பாரி ஊர்வலம்

தேனி சடையால் முனீஸ்வரர் கோவிலுக்கு, சுப்பன்தெரு பகுதியில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று சுப்பன்தெருவில் இருந்து மேளதாளத்துடன் பெண்கள் முளைப்பாரி எடுத்து, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்துக்கு முன்பாக ஆண்கள் முகத்திலும், உடலிலும் வண்ண பொடிகளை பூசியபடி ஆட்டம், பாட்டத்துடன் சென்றனர். கோவிலில் முனீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாட்டுப் பொங்கலையொட்டி மாவட்டம் முழுவதும் கால்நடை வளர்ப்பவர்கள் தங்களின் கால்நடைகளை குளிப்பாட்டி, அவற்றின் உடலிலும், கொம்புகளிலும் வண்ணங்கள் பூசினர். கொம்புகளில் கரும்பு துண்டுகள் கட்டிவிட்டனர். பின்னர், மாட்டுத் தொழுவத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்