திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்: காரணம் அறிந்த மணப்பெண் அதிர்ச்சி

குமரியில் திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் போலீஸ்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2024-06-26 20:02 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் கிராத்தூர் பகுதியை சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க பெண் எம் காம் சி ஏ முடித்து விட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆடிட்டிங் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இதற்காக தினமும் வீட்டில் இருந்து பஸ்சில் சென்று வருவது வழக்கம். அப்போது மார்த்தாண்டம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரான நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்களது காதல் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது.

இதையடுத்து பெண்ணின் பெற்றோர் மகளுக்கும், ராஜேசுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து ராஜேஷிடம் விசாரித்தனர். அப்போது தான் சென்னையை சேர்ந்தவர் என்றும், தன்னுடைய தாய், தந்தை இருவரும் சிறுவயதிலேயே தன்னை பாட்டியிடம் ஒப்படைத்து விட்டனர். இதனால் தனக்கு உறவினர்கள் என்று யாரும் இல்லை என்று கூறி உள்ளார். இதை உண்மை என நம்பிய பெண்ணின் பெற்றோர் இருவருக்கும் வீட்டின் அருகே உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் வைத்து நேற்று திருமணத்தை நடத்தினர்.

இதற்காக நேற்று முன்தினமே குமரி மாவட்டத்திற்கு வந்த ராஜேஷ் மார்த்தாண்டம் பகுதியில் ஒரு தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். தாலிகட்டும் நேரத்திற்கு ஒரு காரில் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 5 ஆண் நண்பர்களுடன் சென்றுள்ளார். மாப்பிள்ளை வீட்டார் சார்பில் இவர்கள் மட்டும் தான் உறவினர்கள். திருமணம் முடிந்ததும் மணமக்கள் இருவரும் மணமகள் வீட்டிற்கு சென்றனர்.

அப்போது ராஜேசுடன் பணிபுரிந்த அப்பகுதியை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் அவரை பார்த்து நீங்கள் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்தவர் தானே, உங்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று கூறினீர்களே என்று கேட்டுள்ளார். அதன் பின்னர் தான் அவர் முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்தது தெரியவந்தது.

இதனை கேட்டு மணப்பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் நித்திரவிளை போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த நித்திரவிளை போலீசார் ராஜேஷை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். இதற்கிடையே ஆவேசத்தில் இருந்த மணப்பெண்ணின் உறவினர்கள் ராஜேஷை சரமாரியாக தாக்கினர்.

எனினும் போலீசார் அவரை மணப்பெண்ணின் உறவினர்களிடம் இருந்து மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மணப்பெண் புகார் அளித்தார். அதன்பேரில் ராஜேஷ் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்