தம்பதி கொலை வழக்கில் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை

வேப்பந்தட்டை அருகே நடைபெற்ற தம்பதி கொலை சம்பவம் தொடர்பாக அவர்களது உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-02-02 18:30 GMT

தம்பதி கொலை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 75). இவரது மனைவி மாக்காயி (70). இருவரும் விவசாய தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு மாக்காயி (53), காந்தி (50), செல்வாம்பாள் (48), சரோஜா (43) ஆகிய 4 மகள்கள் உள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் திருமணமாகி உள்ளூரிலேயே தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

கடந்த 1-ந் தேதி காலை வெகுநேரமாகியும் மாணிக்கம், மாக்காயி ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களது வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும், மாக்காயி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகைகள் மற்றும் பீரோவில் வைத்திருந்த பணத்தையும் மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

வட்டி தொழில்

இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவி உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்தநிலையில் மாணிக்கம் விவசாய தொழில் மட்டுமல்லாமல் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழிலையும் செய்து வந்துள்ளார்.

எனவே மாணிக்கத்திடம் இருந்து வட்டிக்கு கடைசியாக பணம் வாங்கியவர்கள் விவரம், கடைசியாக பணம் திருப்பி கொடுத்தவர்கள் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

உறவினர்களிடம் விசாரணை

மேலும் மாணிக்கத்தின் மகள்கள், மருமகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணம் மற்றும் நகைக்காக உறவினர்களே ஆள் வைத்து தம்பதியை கொலை செய்துள்ளனரா? அல்லது வட்டிக்கு பணம் கொடுத்த வகையில் எதிரிகள் யாரேனும் கொலை செய்துள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்