விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு
திருவண்ணாமலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் நகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 3 அடி முதல் 10 அடி வரை பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படும்.
மேலும் களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வாங்கி சென்று தங்கள் வீடுகளில் வைத்து வழிபாடு செய்வார்கள்.
அதைத்தொடர்ந்து 3-வது நாளான வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தண்டராம்பட்டு சாலையில் உள்ள தாமரைக் குளத்தில் கரைக்கப்படும்.
இந்த விநாயகர் சிலை ஊர்வலம் திருவண்ணாமலை மாடவீதியில் உள்ள காந்தி சிலை அருகில் தொடங்கி நடைபெறும். கடந்த 2018-ம் ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்ற போது கோஷ்டி மோதல் காரணமாக கலவரம் ஏற்பட்டது.
கொடி அணிவகுப்பு
அதுபோன்று அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்கலாம் என்பதை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் கொடி அணிவகுப்பு இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.
போலீசாரின் அணிவகுப்பு திருவண்ணாமலை காந்தி சிலை அருகே தொடங்கி திருமஞ்சனம் கோபுரம் தெரு, காமராஜர் சிலை வழியாக சென்று தாமரைக் குளம் அருகில் நிறைவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.
வந்தவாசி
வந்தவாசியில் விநாயகர் சதுர்த்தி மற்றும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கு பாதுகாப்பு பணிக்காக சுமார் 350 போலீசார் ஈடுபடுத்த உள்ளனர்.
இதையொட்டி போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது.
ஊர்வலம் அங்காளம்மன் கோவில் திடலில் இருந்து புறப்பட்டு, தேரடி, பஜார் வீதி, பழைய பஸ் நிலையம், கோட்டை மூலை, தாலுகா அலுவலக ரோடு, அச்சரப்பாக்கம் ரோடு வழியாக சென்று விநாயகர் சிலைகள் கரைக்கும் இடமான பூமா செட்டிகுளம் வந்து அடைந்தது.
ஊர்வலத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, அல்லிராணி, விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.