விருகம்பாக்கத்தில் தாயின் கள்ளக்காதலை கண்டித்த பிளஸ்-2 மாணவனுக்கு கத்திக்குத்து - தனியார் நிறுவன ஊழியர் கைது
விருகம்பாக்கத்தில் தாயின் கள்ளக்காதலை கண்டித்த பிளஸ்-2 மாணவனை கத்தியால் குத்திய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மதன்குமார்(வயது 17). இவர், அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறார். இவருடைய தாயார், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
அப்போது அவருக்கு வேளச்சேரி, கன்னியம்மன் கோவில் 2-வது தெருவை சேர்ந்த கார்த்திக் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மதன்குமாரின் தாயார், மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார்.
ஆனாலும் கார்த்திக் அடிக்கடி மதன்குமார் வீட்டுக்கு வந்து ெசன்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மதன்குமார், தனது தாயுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படி கார்த்திக்கிடம் கூறியதுடன், இனிமேல் வீட்டுக்கு வரக்கூடாது எனவும் கண்டித்தார். தனது தாயாரையும் கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக், மதன்குமாரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்றார். இதில் காயமடைந்த அவர், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து விசாரித்து வருகிறார்.