இலுப்பூர் புறவழிச்சாலை அருகே மறியல்

8 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இலுப்பூர் புறவழிச்சாலை அருகே மறியல் நடைபெற்றது.

Update: 2023-03-08 19:05 GMT

இலுப்பூர் அருகே உள்ள கூவாட்டுப்பட்டியில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கிராமத்தில் பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். ஆதிதிராவிடர் மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என கோவில் பூசாரி தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இந்த பிரச்சினையை தீர்க்க ஆர்.டி.ஓ. குழந்தைசாமி தலைமையில் சமாதான கூட்டத்தில் புதிய அர்ச்சகர் நியமனம் செய்து அவரிடம் கோவில் சாவியை ஒப்படைக்கவும், ஆதிதிராவிடர்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இவை அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை என கூறி நேற்று முன்தினம் ஆதிதிராவிடர் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில், நேற்று கூவாட்டுப்பட்டி ஊர் பொதுமக்கள் அய்யனார் கோவில் சாவியை தரும்படி 8 பேர், கிராமத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஊர் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வன்முறையை தூண்டும் வகையில் செயல்படும் 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுக்கோட்டை- விராலிமலை சாலை ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வாராததால் அங்கிருந்து கிளம்பி இலுப்பூர் புறவழிச்சாலை அருகே மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆய்வாளர் ராஜூ ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்