தேவகோட்டை நகராட்சி குப்பை கொட்ட எதிர்ப்பு: நகர்மன்ற தலைவர், கவுன்சிலர்கள் திடீர் மறியல் போக்குவரத்து பாதிப்பு

தேவகோட்டை நகராட்சி குப்ைப கொட்ட எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து நகர்மன்ற தலைவர், கவுன்சிலர்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-18 18:45 GMT

தேவகோட்டை

தேவகோட்டை நகராட்சி குப்ைப கொட்ட எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து நகர்மன்ற தலைவர், கவுன்சிலர்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

குப்பை கொட்ட எதிர்ப்பு

தேவகோட்டையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஓட்டல்கள், வீடுகளில் சேரும் குப்பைகளை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தேவகோட்டை ரஸ்தா பகுதியில் தேவகோட்டை நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட குப்பை கிடங்கில் கொட்ட விடாமல் சிலர் தடுத்து வந்தனர்.இதனால் தேவகோட்டையில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசியது. இது குறித்து நகரமன்ற தலைவர் கா.சுந்தரலிங்கம் காரைக்குடி நகராட்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக நிலை ஏற்படாததால் கலெக்டர் தலையிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி காரைக்குடி நகராட்சி அதிகாரிகளுடன் தேவகோட்டைக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் குப்பைகளை கொட்டுவதற்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து நேற்று தேவகோட்டை நகராட்சி குப்பைகளை எடுத்துக்கொண்டு கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தேவகோட்டை நகராட்சி குப்பை கொட்ட எதிர்ப்பு:

இதனால் தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் பஸ் நிலையம் முன்பு அனைத்து குப்பை லாரிகளையும் சாலைகளில் நிறுத்தியபடி திடீர் மறியல் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டம் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது இதனால் போக்குவரத்து பாதித்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் தேவகோட்டை தாசில்தார் செல்வராணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் அன்சாரி உசேன் ஆகியோர் நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் ரமேஷ் கவுன்சிலர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் 2 நாட்களுக்கு அங்கு குப்பைகளை வழக்கம்போல் கொட்டிக் கொள்ளலாம் என்றும் மீண்டும் காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை. தேவகோட்டை நகர மன்ற தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி குப்பை கொட்டுவது சம்பந்தமாக முடிவு எடுக்கலாம் என கூறியதை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த போராட்டத்தில் கவுன்சிலர்கள் கமலக்கண்ணன், கோமதிபெரியகருப்பன், நித்யாகுமார், பவுல்ஆரோக்கியசாமி, அய்யப்பன், லோகேஸ்வரி பழனிவேல், சேக் அப்துல்லா, தனலெட்சுமி நல்லுபாண்டி, அ.தி.மு.க ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அஜீஸ் கான், பா.ஜனதா ஆசைதம்பி, இந்திய கம்யூனிஸ்டு மீனாள் சேதுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்