ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படம் இடம் பெற வேண்டும்

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான தமிழக அரசின் விளம்பரங்களில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பெயரையும், புகைப்படத்தையும் இடம் பெற செய்து வெளியிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-07-28 20:24 GMT


44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான தமிழக அரசின் விளம்பரங்களில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பெயரையும், புகைப்படத்தையும் இடம் பெற செய்து வெளியிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

செஸ் ஒலிம்பியாட்

சிவகங்கையை சேர்ந்த ராஜேஷ்குமார் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. பிரதமர் மோடி இந்த போட்டிகளை தொடங்கி வைக்க, போட்டிகள் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய இந்த நிகழ்வை, ஆளுங்கட்சி தங்களுக்கான அரசியல் ஆதாயம் தேடும் நிகழ்ச்சியாக பயன்படுத்தி கொண்டது.

விளம்பரம்

இந்நிகழ்ச்சிக்கான விளம்பரங்களில், இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்களை தவிர்த்து தமிழக முதல்-அமைச்சரின் புகைப்படம் மட்டுமே இடம்பெற செய்திருப்பது சட்டவிரோதமானது. எனவே, 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பெயர் மற்றும் புகைப்படத்தை இடம்பெற செய்து வெளியிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், டெல்லியில் இருந்து மூத்த வக்கீல் அணில் காணொலி காட்சி மூலம் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது, தலைமை நீதிபதி, இந்த நிகழ்வு நமது நாட்டிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. பிரதமர் இந்த போட்டிகளை தொடங்கி வைப்பதாக நாளிதழ்களில் செய்யப்பட்ட விளம்பரங்களில், பிரதமரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தல் காரணமாக ஜனாதிபதியின் புகைப்படம் இடம்பெறவில்லை. நான் மதுரையில் இருப்பதால், அந்தநிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த நிகழ்ச்சியை தவறவிடுவதற்காக கவலைப்படுகிறேன், என்றார்.

ஏற்கத்தக்கதல்ல

மனுதாரர் வக்கீல், பிரதமரின் புகைப்படத்தை இத்தகைய நிகழ்வில் இடம்பெறச் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது ஏற்கத்தக்கதல்ல. அதற்கு தமிழக அரசு தரப்பில் மன்னிப்பு கோர வேண்டும் என வாதிட்டார்.

இந்த வாதத்துக்கு, தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழக அரசு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளது. பிரதமரின் வருகை 22-ந் தேதி உறுதி செய்யப்பட்டு மத்திய அமைச்சகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டதையடுத்து, நாளிதழ்களில் வெளியான விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு தலைமை நீதிபதி அமர்வு, ஜனாதிபதியும், பிரதமரும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர்களின் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாமே? 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் சூழலில், நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும், என்றனர். அத்துடன், இந்த போட்டிகள் முதலில் நமது தேசத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு.

ஒத்திவைப்பு

சோவியத் யூனியன், செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் நடத்த முடிவெடுத்தது பெருமைக்குரியது. இந்த நாடு, ஜனாதிபதி, பிரதமரின் கீழ் நிர்வகிக்கப்படும் சூழலில், இது போன்ற சர்வதேச நிகழ்ச்சிகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து, இந்த வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இதனால், இந்த வழக்கு நேற்று பகல் முழுவதும் தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

புகைப்படம் இடம்பெற வேண்டும்

பின்னர் இந்த வழக்கில் நேற்று மாலை நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில், தமிழக அரசு தரப்பில் விளம்பரம் வெளியிட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறப்படுகிறது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்களில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் விளக்கங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் இல்லை என தெரியவருகிறது. ஆகவே பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்களில் வெளியிடப்படும் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அப்போது, தமிழக அரசு பொதுமக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் செய்திருந்தால் அவர்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

கடும் நடவடிக்கை

ஆனால், பொது மக்களின் உணர்வுகளை மதிப்பதும், சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி அழியாத முத்திரையை பெற்றுத்தருவதும் தான் ஒருங்கிணைப்பாளர்களின் சிறந்த மன்னிப்பாக அமையும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் புகைப்படத்துடன் வைக்கப்படும் விளம்பரங்கள் சேதப்படுத்தப்பட்டாலோ, ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ அதில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்