கனல் கண்ணன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு- வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கனல் கண்ணன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கள் செய்யப்பட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2023-09-20 00:50 GMT


சினிமா சண்டை பயிற்சியாளரான கனல் கண்ணன் இந்து முன்னணி நிர்வாகியாகவும், பா.ஜனதா ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட புகாரின் பேரில், அவரை நாகர்கோவில் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதாவது, மத போதகர் ஒருவர் பெண்ணுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவு கிறிஸ்தவ மதத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, தி.மு.க.வை சேர்ந்த ஆஸ்டின் என்பவர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய கோரி மதுரை ஐகோர்ட்டில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தன் மீது புகார் அளித்தவர் அரசியல் கட்சியை சேர்ந்தவர், இந்த புகார் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல். சமூகவலைதளத்தில் வந்த வீடியோவை மட்டுமே தான் பகிர்ந்ததாகவும், போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தவறானவை.டுவிட்டரில் தெரிவித்த கருத்து யாரையும் பாதிக்கவில்லை. எனவே வழக்கை ரத்து செய்து போலீசாரின் நடவடிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி நாகார்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஆஜராக கால அவகாசம் கேட்கப்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்