பொது நிகழ்ச்சிகள் நடத்த ஊராட்சியில் அனுமதி:மயிலாடும்பாறை பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு
பொது நிகழ்ச்சிகள் நடத்த ஊராட்சியில் அனுமதி பெற வேண்டும் என்று மயிலாடும்பாறை பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடும்பாறை பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், அரசு விழா, அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு மயிலாடும்பாறை ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். அதேபோல அந்த பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளுக்கும் ஊராட்சியில் அனுமதி பெற வேண்டும் என்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த போஸ்டர்களால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் பார்வதி அன்பில் பாரத சுந்தரம் கூறியதாவது:-
அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் போது பட்டாசு வெடிப்பது, மேள தாளங்கள் வாசிப்பதால். சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும், பொது நிகழ்ச்சிகளின் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர்களின் ஆதரவோடு இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி பஞ்சாயத்து சார்பில் போஸ்டராக ஒட்டப்பட்டது என்றார்.