ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கலெக்டரிடம் மக்கள் மனு

கோத்தகிரி அருகே அட்டடி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று கலெக்டரிடம் மக்கள் மனு அளித்தனர்.

Update: 2023-09-04 19:00 GMT

ஊட்டி

கோத்தகிரி அருகே அட்டடி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று கலெக்டரிடம் மக்கள் மனு அளித்தனர்.

நடைபாதை

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள், அரசியல் அமைப்பினர், பொதுநல அமைப்புகள் பல்வேறு மனுக்களை கொடுத்தனர்.

கோத்தகிரி அருகே பெப்பேன் அட்டடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோத்தகிரி தாலுகா பெப்பேன் அட்டடி கிராமத்தில் 30 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பிரதான சாலையில் இருந்து கிராமத்துக்கு செல்ல வருவாய்த்துறைக்கு சொந்தமான பொதுப்பாதையை நடைபாதையாக பயன்படுத்தி வந்தோம். அந்த பாதையில் தடுப்புச்சுவருடன் கூடிய கான்கீரிட் நடைபாதை அமைக்க நடுஹட்டி ஊராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து, பணி தொடங்கப்பட்டது.

வளர்ச்சி பணிகள்

இதற்கிடையே ஒருவர் அந்த நிலம் தனக்கு சொந்தமானது என்று கூறி பணிகளை நிறுத்தி விட்டார். சுடுகாடு, மருத்துவமனை, வெளியூர் பயணம் என அனைத்திற்கும் அந்த பாதையை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அங்கு தடுப்புச்சுவர் அமைக்காவிட்டால் மண்சரிவு ஏற்படக்கூடும். வருவாய்த்துறை நிலம் மட்டுமின்றி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களையும் ஆக்கிரமித்து உள்ளார்.

எனவே, வருவாய்த்துறை நிலத்தை ஆக்கிரமித்து உள்ளவர் மீது நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பை மீட்டு பாதியில் நிறுத்தப்பட்ட வளர்ச்சி பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மேலாண்மை குழு தலைவர் விஜயலட்சுமி,உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் அளித்த மனுவில், நுந்தளா சுற்றுவட்டார பகுதியில் இருந்து 3 கி.மீ. தூரம் உள்ள தாம்பட்டி பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், எங்கள் ஊர்களில் இருந்து தாம்பட்டிக்கு செல்ல ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலமாக தொலைதூர குடியிருப்புகளுக்கு போக்குவரத்து வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இத்தலார் அருகே போர்த்தி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிகள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் இருந்து பிரதான சாலைக்கு வர பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்