திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணியில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்; கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணியில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நாளை முதல் நடைபெறும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-26 16:56 GMT

திருவண்ணாமலை மாவட்ட அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தப்பட்டு, பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

செய்யாறு மற்றும் ஆரணி கோட்ட பகுதிகளை சார்ந்த பொது மக்கள் மனு அளிப்பதற்காக அதிக தொலைவில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தந்து மனுக்கள் அளிக்கின்றனர். இதன் காரணமாக பொது மக்களுக்கு அதிக பயண காலம், பஸ், உணவு உள்ளிட்ட செலவினங்களும் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்கும் விதமாக பொதுமக்கள், விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரின் நலன் கருதி நாளை (திங்கட்கிழமை) முதல் பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையிலும், செய்யாறு மற்றும் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடைய சப் கலெக்டர் அல்லது உதவி கலெக்டர் தலைமையிலும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டங்கள் நடைபெறும்.

மேற்படி 3 இடங்களில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டங்களில் தொடர்புடைய கோட்டங்களை சார்ந்த சார்நிலை அலுவலர்கள் கலந்துகொள்வார்கள். பொது மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு இணைய வழி ஒப்புதலும் அளிக்கப்படும். எனவே பொது மக்கள், விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களுக்கு அருகாமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டங்களில் மனுக்கள் அளித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்