முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்

ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

Update: 2023-08-16 17:54 GMT

ஆடி அமாவாசை

இந்துக்களில் முன்னோர்களுக்கு திதி எனப்படும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதில் தமிழ் மாதங்களில் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரக்கூடிய அமாவாசை தினங்களில் திதி கொடுப்பது சிறப்பு வாய்ந்தது என ஐதீகமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி அமாவாசை தினம் மாத தொடக்கம் மற்றும் 31-ந் தேதியில் அமைந்தது. இதில் ஆடி மாத கடைசி தேதியையொட்டி வரக்கூடிய அமாவாசை தினம் சிறப்பானதாக கருதப்பட்டது. அதன்படி ஆடி அமாவாசையையொட்டி இன்று முன்னோர்களுக்கு பொதுமக்கள் பலர் தர்ப்பணம் கொடுத்தனர். புதுக்கோட்டையில் சாந்தநாதசாமி கோவில் அருகே உள்ள பல்லவன் குளக்கரையில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கோவிலில் வழிபாடு

புரோகிதர்கள் ஒரே நேரத்தில் 10 முதல் 15 பேர் வரை அமர வைத்து, அவர்களது முன்னோர்களின் பெயர், விவரம், நட்சத்திரம் கேட்டு வேத மந்திரங்கள் ஓதினர். வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி வைத்து வழிபட்டு பிண்டத்தை அருகில் உள்ள குளத்தில் பொதுமக்கள் கரைத்தனர். மேலும் குளத்தில் இருந்த தண்ணீரை தலை மற்றும் உடலில் தெளித்துக்கொண்டனர்.

தொடர்ந்து அருகில் உள்ள சாந்தநாத சாமி கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்தனர். முன்னோர்களின் ஆசி பெறுவதற்காக பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்தனர். காகங்களுக்கு சாதமிட்டும், ஏழைகள், சாலையோர யாசகர்களுக்கு சாப்பாடு வாங்கியும் கொடுத்தனர். ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் இன்று பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனால் திருவப்பூர் முத்துமாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு கட்டுமாவடி ராமநாத சுவாமி கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக சாமி ஊர்வலம் நடைபெற்றது. தீர்த்தவாரியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. பின்னர் ராமநாத சுவாமி கோவிலில் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்துஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். பொதுமக்கள் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ராமநாத சுவாமியை வழிபட்டனர். தீர்த்தவாரியை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

மணமேல்குடி

மணமேல்குடி அருகே உள்ள கோடியக்கரையில் அதிகாலையிலேயே பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அங்குள்ள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோடியக்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்